அனில் அம்பானி, சச்சின் உள்ளிட்ட 300 இந்தியர்கள் வெளிநாட்டில் முறைகேடாக முதலீடு?: ‘பண்டோரா பேப்பர்ஸ்’ அறிக்கையால் பரபரப்பு

புதுடெல்லி: அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் என இந்தியாவின் 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முறைகேடாக முதலீடு செய்திருப்பதாக ‘பண்டோரா பேப்பர்ஸ்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணம் பதுக்குபவர்கள் குறித்த ரகசிய புலனாய்வு ஆவணங்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். கடந்த 2016ம் ஆண்டு ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் முக்கிய ஆவணங்கள் வெளியாகி, உலக நாடுகளின் பெரும் தலைகளையே புரட்டிப் போட்டன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் அந்த ஆவணத்தில் சிக்கி பதவி இழந்து நாட்டை விட்டு ஓடினர். பனாமா பேப்பர்சில் இந்தியாவை சேர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், `பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் புதிய புலனாய்வு அறிக்கை நேற்று வெளியானது. ‘14 சர்வதேச பெரு நிறுவனங்களிலிருந்து கசிந்த சுமார் 1.9 கோடி கோப்புகளைக் கொண்டு 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களால் புலனாய்வு செய்யப்பட்டு, இந்த `பண்டோரா பேப்பர்ஸ்’ வெளியிடப்பட்டிருக்கிறது’. 2016ல் வெளியான பனாமா ஆவணங்களைப் புலனாய்வு செய்து வெளியிட்ட அதே சர்வதேச பத்திரிகையாளர்கள் குழுவே இந்த பண்டோரா ஆவணங்களுக்கும் புலனாய்வுப் பணி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 117 நாடுகளிலிருந்து, 150-க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணத்தில் நாட்டின் அதிபர்கள், ‘அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 91 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது’.

இந்தியாவை பொறுத்த வரையில், தொழிலதிபர் அனில் அம்பானி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நீரவ் மோடியின் சகோதரியும் பயோகான் நிறுவன அதிபருமான கிரண் மசூம்தர் ஷாவின் கணவர் உள்ளிட்ட 380 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங், மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளைத் தங்கள் புகலிடமாகப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக முதலீடுகள் செய்து, வரிஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த தீவுகள் அனைத்துமே வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சொர்க்க புரியாக திகழ்பவை. ஆனால், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் பண்டோரா பேப்பர்ஸ் தகவல்களை மறுத்துள்ளனர். இருந்தாலும், பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளன. இந்த விவகாரத்தால், வரும் நாட்களில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தலைவர்கள்

பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இன்னாள், முன்னாள் அமைச்சரவை சகாக்கள் எனப் பல்வேறு முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜோர்டான் மன்னர் அப்துல்லா, டோனி பிளேர் ஆகியோர்  கோடிக்கணக்கான மதிப்பிலான பங்களாக்களை வாங்கி உள்ளனர். ரஷ்ய அதிபர் புடின் மொனாக்கோவில் ரகசியமாக சொத்து வாங்கி உள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரானின்  அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் இலாஹி உட்பட 700 பேரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து இம்ரான் கான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சச்சின் என்ன செய்தார்?

பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை முன்னாள் நியமன எம்பியுமான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2016ல் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் சாஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி அஞ்சலி, மாமனார் ஆனந்த் மேத்தா ஆகிய 3 பேர் பெயரில் ரூ.60 கோடிக்கான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. பனாமா ஆவணங்கள் வெளியான பிறகு, மூன்று மாதங்கள் கழித்து அந்த நிறுவனத்தின் பங்குகளை சச்சின் குடும்பத்தினர் திரும்பப் பெற்றதாகவும் பண்டோரா ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இது சட்டப்பூர்வமாக நடந்த பரிவர்த்தனை எனவும், அனைத்தும் அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சச்சின் தரப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதே போல, அனில் அம்பானி தரப்பிலும் பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளன.

கூட்டு புலனாய்வு குழு கண்காணிப்பு

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணம் வெளியான நிலையில், இது குறித்து உன்னிப்பாக கண்காணிக்க ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தலைமையில் கூட்டு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் தலைமையில் செயல்படும். இதில், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கடந்த மாத இறுதியில் மும்பை, புனே, நொய்டா, பெங்களூருவில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட போது, வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து குவிக்கப்பட்டிருப்பதாக ஆவணங்கள் சிக்கியதாக ஒன்றிய நேரடிய வரிகள் வாரியம் நேற்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: