இன்று நடப்பதாக இருந்த காத்திருப்பு போராட்டம் தள்ளிவைப்பு: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: இன்று நடைபெறுவதாக இருந்த காத்திருப்பு போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுடன் தொழிற்சங்க தரப்பில் சங்க தலைவர் பாரதி, பொதுச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் குமார், செயலாளர் நாவரசன், துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது, ஊழியர் சங்கம் தரப்பில் ”நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்கள், பெண் தொழிலாளருக்கு இரவு 8 மணிக்கு மேல் பணிபுரிய அனுமதிக்க கூடாது.

கழிவறை வசதி வேண்டும். ஊழல் செய்த அதிகாரிகள் அவர்களின் தவறுகளை மறைக்க தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பணியிட மாற்றம் செய்வது மற்றும் பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவது, மிரட்டுவது நிறுத்தப்பட வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குறைந்தபட்ச சம்பளத்தை உறுதிப்படுத்தி அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகைகள் உடனே வழங்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டது.  இதை தொடர்ந்து மேலாண்மை இயக்குநர், ‘‘தீபாவளி விற்பனை வரை போராட்டம் எதும் நடத்த வேண்டாம். தீபாவளி விற்பனைக்கு 30% தள்ளுபடி சங்கம் கோரியதின் அடிப்படையிலும் தீபாவளி விற்பனை இலக்கை ரூ.200 கோடியை எட்டும் வகையிலும் 3.10.2021 முதல் 4.11.2021 வரை 30% தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை நாம் அனைவரும் சேர்ந்து எட்டுவதற்கு உழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, ஊழியர் சங்கம் தரப்பில், ‘‘தீபாவளி பண்டிகைக்கு பிறகு மீண்டும் தொழிற்சங்கத்தை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை மேலாண்மை இயக்குநர் ஏற்றுக்கொண்டார். அவரது உறுதியின்பேரில், இன்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் நடத்த உத்தேசித்திருந்த காத்திருப்பு போராட்டம் தீபாவளி பண்டிகை காலம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More