×

புளியந்தோப்பு அடுக்குமாடி தரம் குறித்து தமிழக அரசிடம் ஐஐடி வல்லுநர் குழு ஆய்வறிக்கை அளித்தது: கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை: சென்னை, புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பகுதியில் சுமார் 112 கோடியே 60 லட்சம் மதிப்பில், 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் தரம் இல்லாமல் உள்ளதாகவும், சிமென்ட்  பூச்சுகள் தொட்டாலே உதிர்வதாகவும் குடியிருப்பில் வசித்த மக்கள் புகார்  தெரிவித்தனர்.  இந்த பிரச்னை குறித்து, தமிழக சட்டப்பேரவையில் பெரம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் கவனஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்தார். அப்போது, இந்த கட்டிடம் அதிமுக ஆட்சியாளர்களால் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது. கட்டிட ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார். இதற்கு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘‘ கட்டுமான பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் உறுதித்தன்மையை தெரிந்துகொள்ள ஐஐடிக்கு பரிந்தரைக்கப்பட்டுப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து கட்டுமான பணியில் தவறு இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டினால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து, கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஐஐடி சிறப்பு குழுவாக பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், புளியந்தோப்பு கட்டிடங்களை கடந்த மாதம் முழுவதும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வந்தது. ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) அலுவலகத்தில் உள்ள இயக்குனரிடம், புளியந்தோப்பு அடுக்குமாடி வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை ஐஐடி பொறியாளர் பத்மநாபன் குழுவினர் வழங்கினர். இந்த அறிக்கை 441 பக்கம் கொண்டதாக இருந்தது. ஐஐடி வல்லுநர் குழு அரசுக்கு அளித்த அறிக்கையில், புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி கட்டிடங்கள் தரம் குறித்த முழு விவரத்தையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சில அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை சரிவர செய்ய தவறியுள்ளனர் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், அடுக்குமாடி கட்டிடத்தில் பொதுமக்கள் தங்க அனுமதி அளிக்கலாமா. அல்லது பழுது பார்க்கப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்க வேண்டுமா என்பது குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், கட்டிட ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தால், அந்த கட்டிடத்தை கட்டுமான நிறுவனத்தின் மீதும், தமிழகம் முழுவதும் அந்த நிறுவனம் கட்டி வரும் கட்டுமானங்கள் நிலை குறித்தும் துறை அமைச்சர் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தை, பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் கட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : IIT Expert Panel ,Government of Tamil Nadu ,Puliyanthoppu , Puliyanthoppu apartment, dissertation, activity
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...