கொடி காத்த குமரன் பிறந்த நாளையொட்டி ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலை ‘தியாகி குமரன் சாலை’ என பெயர் மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பலகையை திறந்து வைத்தார்

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விடுதலை போராட்ட வீரர்களைப் போற்றும் பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்கிறது. இதன் ஒரு பகுதியாக சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை சம்பத் நகர்’ என்று பெயர் சூட்டி, பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தலைமை செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1904ம் ஆண்டு நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு மகனாக பிறந்த திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி, திருப்பூரில் 1932ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் உயிரை துறந்தார்.

அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை சம்பத் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக அரசின் அனுமதி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்று நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி மூலம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், திருமகன் ஈ.வெ.ரா எம்எல்ஏ, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுன்னி, மாநகராட்சி ஆணையர்  இளங்கோவன், திருப்பூர் குமரனின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>