×

எய்ம்ஸ் மட்டுமல்ல.. இஎஸ்ஐ மருத்துவமனைகள் நிலையும் அதேதான் பிரதமர் அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டாகியும் பணிகள் துவங்கவில்லை: ஸ்ரீபெரும்புதூர் உள்பட 6 இஎஸ்ஐ பணிகள் இழுத்தடிப்பு

மதுரை: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா. இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் குறித்து சென்னை மண்டல அலுவலகத்திடம் தகவல் கோரியிருந்தார். மத்திய பொது தகவல் அலுவலர் அருள்ராஜ் இதற்கு அளித்த பதில் வருமாறு: தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், நாகர்கோவில், தூத்துக்குடி, திண்டுக்கல், வாணியம்பாடி, திருப்பூர் ஆகிய 6 இடங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் 14.9.2005, ஸ்ரீபெரும்புதூர் 22.7.2010, நாகர்கோவில் 21.12.2012, தூத்துக்குடி 2.02.2012, திண்டுக்கல் மற்றும் வாணியம்பாடி 09.07.2019 ஆகிய தேதிகளில் முன்மொழியப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் 5.12 ஏக்கர், தூத்துக்குடி 5 ஏக்கர், திருப்பூர் 7.46 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில், திண்டுக்கல், வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கு நிலம் தேடும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் திருப்பூருக்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்குரிய கட்டுமான நிறுவனத்தை தலைமை அலுவலகம் தான் முடிவு செய்ய வேண்டும். திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கான ஒப்பந்தப்புள்ளி இந்த மாதத்தில் திறக்கப்படும். மற்ற 5 இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கான டெண்டர் இன்னும் விடப்படவில்லை. திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.81.34 கோடி. மற்றும் 540 நாட்கள் என திருப்பூர்  மருத்துவமனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மற்ற 5 மருத்துவமனைகளுக்கான தகவல்கள் இல்லை. முன்மொழியப்பட்ட 6 இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘2019, பிப். 10ல் திருப்பூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமர் மோடி, அங்கு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. திருப்பூரில் சுமார் நான்கரை லட்சம் தொழிலாளர்கள் இஎஸ்ஐக்குப் பணம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடிக்கு மேல் வசூலாகிறது. எனவே இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி தேவையில்லை. தொழிலாளர்களின் பணமே பல நூறு கோடி இருக்கிறது. எனவே திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 6 இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை மதுரை எய்ம்ஸ் கட்டும் பணியை போல் இழுத்தடிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : AIIMS ,ESI , AIIMS is not the only one .. ESI hospitals are in a state of disrepair.
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...