புதுச்சேரி ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னலில் ரூ.400 கோடியில் புதிய மேம்பாலங்களுக்கு முழு நிதியளிக்க மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னலில் ரூ.400 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான முழு நிதியளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கான வரைபடம் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகின்றன. அதேவேளையில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் புதுச்சேரியில் 2 புதிய மேம்பாலங்கள் (100 அடிரோடு, அரும்பார்த்தபுரம்) கட்டப்பட்டு தற்போது மக்களின் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இசிஆரில் இருந்து கடலூர் செல்வதற்கு அதிக நேரமாகிறது. இதனால் ராஜிவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னலில் மேம்பாலங்கள் அமைக்க பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்தன.

இதையடுத்து மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு இதுதொடர்பாக ஒப்புதல் அளித்து வரைபடம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுப்பணித்துறைக்கு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் இவற்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருகின்றன. ராஜிவ்காந்தி சிலையில் அமைக்கப்படும் மேம்பாலம் இசிஆர், காமராஜர் சாலை, ஜிப்மர் ரோடு, வழுதாவர் சாலை, கடலூர் ேராடு என 5 சாலைகளின் இணைப்பாகவும், இந்திராகாந்தி சிக்னலில் அமையும் மேம்பாலமானது கடலூர் சாலையை தவிர்த்து மற்ற 3 சாலைகளை இணைப்பதாகவும் உருவாக்க வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏற்கனவே இந்த 2 இடங்களிலும் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்தோடு, அங்கிருந்து அதிகாரிகள் புதுச்சேரி வந்து இடங்களை நேரில் பார்வையிட்டு சென்றிருந்தனர். தற்போது இதுதொடர்பாக விரிவான விபரங்களை தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுத்து திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இத்திட்டத்துக்கு முழு நிதியளிக்க மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதர திட்டங்களைப்போல் அல்லாமல் நிதி நெருக்கடியால் ஏற்படும் தாமதங்கள் இதில் ஏற்படாது. அதனல் இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியும். இவை இறுதிவடிவம் பெற்றதும் 2 ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டக்காலம் வரையறுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 மேம்பால பணிகள் முடிவடையும்பட்சத்தில் புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More
>