×

3வது அலை வராவிட்டால் திருப்பதியில் பொது தரிசனத்துக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவர் ஏ.ஜே.சேகர் கூறினார். சென்னையில் இன்று தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக ஏ.ஜே.சேகர்  பொறுப்பேற்றுக்கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில், நிர்வாகக்குழு உறுப்பினர் சங்கர், வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி எம்.பி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புரட்டாட்சி மாதம் என்பதால் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாள் தோறும் 15 ஆயிரம் பேர் வரையில் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கொரோனா 3வது அலை வரவில்லை என்றால் திருப்பதி பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். இதேபோல், முன்பதிவு செய்யும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் வருகிறது. நிறைய பேர் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயல்வதால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. வரும் 25ம் தேதிக்குள் அது சரிசெய்யப்படும். குறிப்பாக, ஒன்றரை மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் டிக்கெட் புக் செய்கிறார்கள்.

பின்னர், தமிழக தலைவர் ஏ.ஜே.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று இரண்டாவது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை தி.நகரில் அமைந்துள்ள கோயிலில் தலைவராகவும், தமிழகத்தில் தேவஸ்தானம் சார்பில் உள்ள கோயில்களுக்கு தலைவராக ஆந்திர முதல்வரின் ஆணைப்படி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக நான் தலைவராக இருந்தேன். அதில், என்னால் முடிந்த சேவையை பக்தர்களுக்கு செய்துள்ளேன். கடந்த 13 வருடமாக கிடப்பில் இருந்த பத்மாவதி அம்மாள் தாயாரின் கோயில் அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். அதேபோல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மலையடிவாரத்தில் பசுக்களுக்கென்று ஒரு கோயில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி ஆந்திர முதல்வர் கோயிலை பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மேலும், சென்னையில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்தது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு வரும் வழியில் தேவஸ்தானம் சார்பில் இலவச தங்கும் விடுதிகள் செய்து தரப்படும். நீண்ட நாள் கோரிக்கையாக தமிழகத்தில் திருப்பதி போன்ற கோயில் கட்டவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்போது அரசு சார்பில் இரண்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக பணிகள் கிடப்பில் இருந்தது. எனவே, மீண்டும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தமிழக முதல்வரை சந்தித்து விரைவில் அந்த நிலத்தை தேவஸ்தானத்திற்கு வழங்கினால் உடனடியாக அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ராயப்பேட்டையில் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த  கோயில் நிலங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீட்டு வருகிறார். இது மிக மிக வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. டைரி விவகாரம் குறித்து 2016ம் ஆண்டிலேயே நான் தெரிவித்துவிட்டேன். அந்த டைரியை கொண்டுவந்து காண்பியுங்கள் என்று நான் கேட்டும் யாரும் கொண்டுவந்து இதுவரை காண்பிக்கவில்லை. பதவி வரும் போது இதுபோன்ற வதந்திகள் வந்துகொண்டு தான் இருக்கும். தெய்வசக்தி என்னிடம் உள்ளது மனிதனின் சூழ்ச்சி இதில் பழிக்காது. இவ்வாறு ஏ.ஜெ.சேகர் கூறினார்.

Tags : Tirupati , Tirupati
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...