×

காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: காட்பாடி வழியாக பெங்களூரு சென்ற புவனேஷ்வர் - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீசார் நேற்று அதிகாலை பறிமுதல் செய்தனர். ஆந்திரா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கு கார் உள்பட வாகனங்கள் மூலம் சாலை வழியாகவும், ரயில்கள் மூலமும் தினமும் கஞ்சா கடத்தி செல்லப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா போன்றவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கும் கார், வேன், லாரிகள், பஸ்கள் மூலமாகவும், ரயில் மூலமாகவும் கடத்தி வரப்படுகிறது.

அவ்வபோது இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளூர் போலீசார் மற்றும் கலால் போலீசாரின் சோதனையிலும், ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினராலும் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் சாலை வழியாகவும், ரயில்கள் மூலமும் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்த மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் 8 பொட்டலங்களாக கட்டப்பட்ட 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதைதொடர்ந்து 2வது நாளாக நேற்று அதிகாலையும் காட்பாடி ரயில்வே போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் அதிகாலை 4.20 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 கோச்சில் நடத்திய சோதனையில் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 10 பொட்டலங்களாக கட்டப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய காட்பாடி ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

நெட் ஒர்க் மூலம் கஞ்சா கடத்தல்

கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை ரயில் மூலம் கடத்துபவர்கள், குறிப்பிட்ட நகரின் பிரதான ரயில் நிலையத்தை விட்டு அடுத்து சில கிலோ மீட்டர் இடைவெளியில் கடைசி நிறுத்தமாக கொண்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் ரயில்கள் மூலமே கடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் கூட பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தை விட்டு 5 கி.மீ தொலைவில் உள்ள யஷ்வந்த்பூரில் கடைசியாக நிறுத்தப்படும் ரயில்களிலேயே கஞ்சா கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கஞ்சாவை பொறுத்தவரை இதன் நெட்ஒர்க் ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் வரை இருக்கலாம் என்றும் இதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே இருக்கலாம் என்றும் ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே, இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவல்துறை, கலால் பிரிவு, போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டையில் 18 கிலோ குட்கா சிக்கியது

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் சோதனை செய்யும் ரயில்களில் கஞ்சா, மது பாட்டில்கள், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடத்தல்கார்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மைசூரில் இருந்து திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 5வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அந்த ரயிலை சோதனை செய்த ரயில்வே போலீசார் எஸ்5 கோச்சில் பயணிகளின் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு மூட்டையை சோதனை செய்ததில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 18 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Katpadi ,Bangalore , Cannabis
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி