×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 9 மாவட்டங்களில் 78 மாவட்ட கவுன்சிலர், 755 ஒன்றிய கவுன்சிலர், 1577 ஊராட்சி தலைவர் பதவிக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 12,252 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், வெளியூரை சேர்ந்தவர்கள் அந்தந்த பஞ்சாயத்துகளில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்புமனுக்களும், 28 மாவட்டங்களுக்கான தற்செயல் தேர்தலில் 789 பதவியிடங்களுக்கு 2,547 வேட்புமனுக்களும் பெறப்பட்டது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 15,287 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு சின்னங்களும் ஒதுக்கப்பட்டது. இதில், 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. அதாவது, 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக ஆகிய கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் 7 முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் களம் காண்கிறார்கள்.

இதனால் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீதிவீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அதிகாலை முதல் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம், கல்வி சம்பந்தப்பட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக கூறி வாக்கு சேகரித்தனர்.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தல் என்பதால் பல கிராமங்களில் திருவிழா போல் காணப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 17,130 போலீசாரும், 3,405 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பதற்றமான வாக்குசாவடிகள் மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தி அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது.

இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வதால் வெளியூரை சேர்ந்தவர்கள் அந்தந்த பஞ்சாயத்துகளில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண மண்டபம், விடுதிகளில் தங்கியுள்ள கட்சி நிர்வாகிகளும் இன்று மாலையே வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு பிறகு வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா என காவல்துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். மாலை 5 மணிக்கு பிறகும் தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.


Tags : Rural Inland elections , Local elections
× RELATED தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில்...