×

2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு தூக்கி எறியப்படும் : கே. பாலகிருஷ்ணன் பேட்டி!!

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: தேசிய வேலை உறுதி திட்டம் இடதுசாரி கட்சிகளின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு 100 நாள் வேலை என்ற இத்திட்டத்தில் சராசரியாக 55 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி சீமான் குறை கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது என்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும். மீதமுள்ள 300 நாட்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டியது தானே.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை போல உள்ளாட்சி தேர்தலில் 100 விழுக்காடு கூட்டணி ஏற்படுவது சாத்தியமில்லை. சில இடங்களில் உள்ளூர் அளவிலான பிரச்னைகள் உள்ளது. எங்கள் கட்சிக்குகூட இன்னும் கூடுதலான தொகுதிகளை ஒதுக்கி இருக்கலாம் என கருதுகிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் இந்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அதனாலேயே கூட்டணியில் பிளவு என்று எடுத்து கொள்ள முடியாது. உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றி பெறும்.

கடுமையான நிதி நெருக்கடியிலும் பல நல்ல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. போட்டி தேர்வுகளுக்கான தரமான பயிற்சி மையங்களை மாநில அரசே நிறுவ வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த அரசை மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர். தற்போது சிறு, சிறு குழப்பங்கள் நிலவினாலும் தேர்தல் நேரத்தில்  மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளும் ஓரணியில் திரளும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Modi ,parliamentary election ,Balakrishnan , பாலகிருஷ்ணன்
× RELATED 38 பூத்களில் வாக்குப்பதிவு தாமதம்