ஆந்திர போலீசிடம் சிக்கிய கோபுர கலச திருடர்கள்: 2 பஞ்சலோக கலசங்கள் பறிமுதல்

சித்தூர்: தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் கோயில் கலசங்களை களவாடி புதுச்சேரியில் விற்பனை செய்த ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூரில் உள்ள கோயில் ஒன்றிலிருந்து மர்ம நபர்கள் கோயில் கலசங்களை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கங்காதர நெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்காசு என்ற இடத்தில் ஆந்திர காவல்துறையினர் வாகன சோதனை நடத்தியபோது கார் ஒன்று நிற்காமல் சென்றது. பின்னர் காரை துரத்திப்பிடித்த காவலர்கள் அதிலிருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும் பல கோயில்களில் கோபுர கலசங்களை திருடி இருப்பதும் தெரிய வந்தது. திருத்தணி, சித்தூர் ஆகிய கோயில்களில் இருந்து திருடிய கலசங்களை புதுச்சேரியை சேர்ந்த 2 பேரிடம் தலா 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராணிப்பேட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 2 பஞ்சலோக கலசங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.

Related Stories:

More
>