புளியந்தோப்பில் தொட்டாலே உதிரும் அடுக்குமாடி குடியிருப்பு.. கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர்கள் குழு பரிந்துரை

சென்னை : சென்னை புளியந்தோப்பில் மிகவும் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் கட்டப்பட்ட தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக ஐஐடி நிபுணர் குழுவினர் தங்கள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர்.அதில் இந்த பணிகளை மேற்கொண்ட PST நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசுக்கு நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். அத்துடன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர். கே.பி. பார்க்கில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அண்மையில் கட்டப்பட்டது.

இதில் 1900 குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டன. இதை பிஎஸ்டி என்னும் கட்டுமான நிறுவனம் கட்டியிருந்தது. ஆனால் அனைத்து கட்டிடங்களும் மிகவும் மோசமாக இருப்பதும் படிகள், சுவர்கள், மேற்கூரைகள் மிக மிக தரமற்ற முறையில் கட்டுப்பட்டு இருப்பதையும் ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து அங்கு அமைச்சர்கள் ஆய்வு செய்த பின்னர், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளின் உறுதி தன்மையை அறிய ஐஐடி நிபுணர் குழு ஆய்வை தொடங்கியது. தற்போது அந்த குழுவினர் தங்கள் ஆய்வை முடித்துள்ளனர். அதன் இடைக்கால அறிக்கை கடந்த செப் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 441 இதன் முழுமையான அறிக்கை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர் கோவிந்த ராமிடம் அளிக்கப்பட்டது. இந்த குழுவினர் 3 கட்டிடங்களிலும் மொத்தம் 100 இடங்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என்று தெரிகிறது.

Related Stories: