×

தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அலர்ட்

சென்னை : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ,ஈரோடு ,விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி ,கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ,நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வருகிற 6ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர் ,திண்டுக்கல் ,தேனி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 7ம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 8ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்,என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Theni ,Dindigul ,Tenkasi ,Madurai , தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...