×

புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை!: ஐகோர்ட்டில் மாநில அரசு தகவல்..!!

சென்னை: புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவறையில் தவறுகள் நடந்துள்ளது. பட்டியலினத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் முறையான வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்று முத்திலால் பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் சட்டத்தை மீறி உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முதல்கட்ட தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை அவகாசம் உள்ளதால் தலையிடவில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பதிலளிக்க (4.10.2021) வரை அவகாசம் வேண்டும் என புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதில் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக புகார் வந்து கொண்டிருப்பதால் அதனை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் புதுச்சேரியில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான திட்டம் இல்லை என்பதால் வருகின்ற 21ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை. 7ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைக்கப்பட்டது. இந்த வழக்கில் முதலமைச்சர் தலையிட்டு உரிய தீர்வுகாண இருப்பதாகவும் புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்; அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Pondicherry , Puducherry, Local Government Election, ICC, State Government
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...