×

வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கினாரா சச்சின்? : பிரிட்டிஷ், வெர்ஜின் தீவுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாக பாண்டோரா ஆவணங்களில் தகவல்!!

மும்பை : வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியாகி உள்ளன. ஐசிஐஜே எனப்படும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த சுமார் 1.2 கோடி ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பல்துறை பிரபலங்களின் சட்ட விரோத கறுப்புப் பண முதலீட்டு ரகசியங்களை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்து இருப்பதாக ஐசிஐஜே கூறியுள்ளது. பாண்டோரா பேப்பர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான சில மாதங்களில் வெர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனந்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக் கொண்டதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

சச்சின் தவிர பாண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் தொழில் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட 300 இந்திய பிரபலங்களின் பெயர்கள் உள்ளதாக தெரிகிறது. அதே போல் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சகோதரி தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதும் தெரியவந்தது. ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாப் பிரபலம் ஷகீரா உள்ளிட்டோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sachin ,British ,Virgin Islands ,Pandora , ஆவணங்கள்,ஐசிஐஜே ,சச்சின் டெண்டுல்கர்,பாண்டோரா பேப்பர்ஸ்
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!