போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது: லக்கிம்பூரில் இணையதள சேவை துண்டிப்பு.!

லக்கிம்பூர்: லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்கிறது, இது பற்றி பேச வார்த்தைகளே இல்லை; இந்தியா விவசாயிகள் நாடு என்பதை மறந்துவிட்டு ஒன்றிய அரசு அவர்களை வஞ்சிப்பதாக பிரியங்கா குற்றச்சாட்டு கூறியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது.

இந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர்.

அப்போது அந்த வழியாக பா.ஜ.க.வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று நேரில் செல்வதாக இருந்தது. லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

Related Stories:

More
>