மேற்கு வங்கத்தில் நடந்த பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி: முதல்வராக நீடிப்பதில் இருந்த சிக்கல் நீங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பவானிப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை 58 ஆயிரத்து 835 வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றார். இதன்மூலம், மம்தா முதல்வராக நீடிப்பதில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, நந்திபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா  பானர்ஜி தோல்வி அடைந்தார். திரிணாமுல்லில் இருந்து பாஜ.வுக்கு தாவிய சுவேந்து அதிகாரியிடம் அவர் தோற்றார்.

இருப்பினும், தனது கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, 3வது முறையாக இம்மாநில முதல்வராக பொறுப்பேற்றார். அரசியலமைப்பு சட்டப்படி, 6 மாதங்களில் இவர் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், பவானிப்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ  தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கும், ஏற்கனவே இம்மாநிலத்தில் காலியாக இருந்த ஜாங்கிபூர், சம்செர்கன்ச் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், ஆரம்பம் முதலே மம்தா முன்னிலை பெற்றார். 21 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை 58 ஆயிரத்து 835 வாக்கு வித்தியாசத்தில் மம்தா தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.

மம்தாவுக்கு மொத்தம் 85 ஆயிரத்து 263 வாக்குகளும், பிரியங்கா திப்ரிவாலுக்கு 26 ஆயிரத்து 428 வாக்குகளும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிரிஜீப். 4 ஆயிரத்து 221 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த வெற்றியின் மூலம், மேற்கு வங்கத்தின் முதல்வராக நீடிப்பதில் மம்தாவுக்கு ஏற்பட்டிருந்த சட்டச் சிக்கல் தீர்ந்துள்ளது. இதேபோல், ஜாங்கிபூர், சம்செர்கன்ச் தொகுதிகளிலும் கூட திரிணாமுல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம், மேற்கு வங்க தலைமை செயலாளர் எச்.கே.திவேதிக்கு அனுப்பிய கடிதத்தில், ‘தேர்தல் வெற்றி கொண்டாட்டம், ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘மேற்கு வங்க மக்கள் தங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மீண்டும் சான்றளிக்கும் வகையில் இந்தப் பெருவெற்றி திகழ்கிறது,’ என்று கூறியுள்ளார். மேலும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

பாஜ.வுக்கு மக்கள் பதிலடி

வெற்றி உறுதியானதும் மம்தா அளித்த பேட்டியில், ‘‘ எனக்கு வாக்களித்த மக்களுக்கும், 6 மாதங்களுக்கு முன்பாகவே இத்தொகுதியில் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும்  நன்றி. பாஜ.வுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்,’’ என்றார்.

நகைச்சுவை

பாஜ வேட்பாளர் திப்ரிவால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அளித்த பேட்டியில், ‘நான் வெற்றி பெற்றால் பெரியளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு குவிக்க வேண்டும்,’ என்று கூறியது நகைச்சுவையாக மாறியது.

Related Stories: