×

6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது ஆர்சிபி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

ஷார்ஜா: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 6 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 57 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கேப்டன் கோஹ்லி 25, படிக்கல் 40 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), டி வில்லியர்ஸ் 23 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் முகமது ஷமி, மோய்சஸ் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல் - மயாங்க் அகர்வால் ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. ராகுல் 39 ரன் (35 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஷாபாஸ் பந்துவீச்சில் ஹர்ஷல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 3 ரன்னில் வெளியேற, அகர்வால் 57 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சர்பராஸ் கான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, எய்டன் மார்க்ரம் 20 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்ட நிலையில், ஷாருக் கான் (16 ரன்) முதல் பந்தில் ரன் அவுட்டானது பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை கொடுத்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹென்ரிக்ஸ் 12 ரன், ஹர்பிரீத் பிரார் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஸ்பின்னர் யஜ்வேந்திர சாஹல் 3 விக்கெட் வீழ்த்தினார். ஜார்ஜ் கார்ட்டன், ஷாபாஸ் அகமது தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கிளென் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 12 போட்டியில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ள பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் விளையாடுவதை உறுதி செய்தது. சென்னை, டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : RCB ,Punjab Kings , RCB beat Punjab Kings by 6 runs to qualify for play-off round
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...