திருவள்ளூர் நகராட்சி 100% தடுப்பூசி செலுத்தி சாதனை: டாக்டர் ராதாகிருஷ்ணன் பாராட்டு

திருவள்ளூர்: வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகர் மற்றும் திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை, பேருந்து நிலையம், டி.இ.எல்.சி.பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, `திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு நகராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சியும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க உள்ளது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் இதுவரை 4.54 கோடி தடுப்பூசிகள் அரசு மூலமாகவும், 25 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மூலமாகவும் என மொத்தம் 4.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று 1700 என்ற பதிவு படிப்படியாக குறைந்து 1500யை நோக்கி வந்து கொண்டிருப்பது நல்ல செய்தி. அதே நேரத்தில், தடுப்பூசி என்பது நோய் தடுப்புக்கான மிக முக்கியமான ஒரு ஆயுதம். தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள்ளாவது முதல் தவணை தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  

மழைக்காலம் என்பதால் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்களை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், நகராட்சி ஆணையர் ப.சந்தானம், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜூ, வெங்கத்தூர் ஊராட்சி தலைவர் சுனிதா பாலயோகி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்  நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். திருவள்ளூர் நகராட்சியில் நேற்றுடன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>