×

மிடுக்கான நடை; விரைப்பான சல்யூட் வாகா எல்லையை போல் காஷ்மீரிலும் அணிவகுப்பு: கிராம மக்கள் உற்சாகம்

ஜம்மு: இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாவில், இருநாட்டு துணை ராணுவத்தையும் சேர்ந்த வீரர்கள் நடத்தும் மிடுக்கான நடை, விரைப்பான சல்யூட்டுன் நடத்தும் அணிவகுப்பு, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒன்று. இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காகவே உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இந்நிலையில், வாகா எல்லையில் நடக்கும் இதே போன்ற அணிவகுப்பு நிகழ்ச்சி, ஜம்மு காஷ்மீரில் சுச்சித்கர் கிராமத்தின் அருகில் உள்ள சர்வதேச எல்லையிலும் காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கிராம எல்லையில் உள்ள ஆர்எஸ்.புரா ஆக்டீரியோ சோதனைச் சாவடியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இந்த அணிவகுப்பை நடத்தினர். இதற்கு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் மனோஜ் சின்கா தலைமை வகித்தார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்ட பிறகு ஆளுநர் சின்கா, ‘இது வரலாறு படைக்கும் நிகழ்வு. இந்த இடம் சுற்றுலா தலமாக மாறி எல்லை கிராம மக்கள் அமைதி, வளம், செழிப்பை பெறுவார்கள். இது நல்ல தொடக்கம். இதனால், சுத்சித்கர் கிராமம் உலகம் முழுவதும் அறியப்படும்,’ என்று கூறினார்.  வீரர்கள் மிடுக்கான சீருடை, துப்பாக்கியுடன் வீரர்கள் மிடுக்காக இந்த அணிவகுப்பை நடத்தியபோது, அதை பார்த்த மக்கள் ‘பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்,’ என்று உணர்ச்சிபூர்வமாக முழுக்கமிட்டனர்.

* சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் டிரோன் வீசிய பயங்கர ஆயுதங்கள்
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் உள்ள பலைன் மண்டல் சவுன்ஜானா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன் ஆயுத குவியலை போட்டு விட்டு சென்றது. இந்த சத்தம் கேட்ட கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கயிற்றால் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிற பாக்கெட்டை கண்டெடுத்தனர். அதை பிரித்து பார்த்த போது, ஏ.கே. ரக துப்பாக்கி, 3 உறைகள், 30 தோட்டாக்கள், ஒரு டெலஸ்கோப் ஆகியன இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தியாவில் யாருக்கு இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து வரும் டிரோன்களை கண்காணிப்பது பாதுகாப்பு படையினருக்கு கடந்த ஓராண்டாக பெரும் சவாலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kashmir , மிடுக்கான நடை; Parade in Kashmir as well as tight salute Wagah border: Villagers cheer
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...