×

கன்னியாகுமரி செல்ல ஞாயிற்றுக்கிழமை தடை; கடற்கரைக்கு சென்றவர்களை தடுத்த போலீஸ்: எட்டி நின்று அழகை ரசித்த பயணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி இல்லை. இதையும் மீறி சென்றவர்களை போலீசார் இன்று காலை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்து செல்வது வழக்கம். கொரோனா 2வது அலை காரணமாக சில மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.  இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை மட்டுமே குறைந்திருந்தது. அதே வேளையில் உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 3வது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது ஞாயிறு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.  

இதே போல் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த தடை காரணமாக இன்று கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தற்காலிக கடைகளும் மூடப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. இருப்பினும் மிக சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. அவர்களை போலீசார் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை. அத்து மீறி நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால் சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்றபடி கடல் அழகையும், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைகளை கண்டு ரசித்தனர். பகவதியம்மன் கோயிலிலும் இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த சுற்றுலா பயணிகள் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு திரும்பினார். சுற்றுலா பயணிகள் வரத்துகுறைவு, ஞாயிறு தடை உத்தரவு  காரணமாக இன்று கன்னியாகுமரி களையிழந்து காணப்பட்டது.

Tags : Kanyakumari ,Yeti , Ban on going to Kanyakumari on Sunday; Police stop those who went to the beach: the passengers who stood and admired the beauty
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...