திருவனந்தபுரம் நவராத்திரி விழா குமரி சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு: தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி சுவாமி விக்ரகங்கள் இன்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் ஆட்சியின்போது, நவராத்திரி விழா பத்மனாபபுரம் அரண்மனையில் வெகுவிமர்சையாக நடந்து வந்தது. 1840ல் தலைநகர் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் நவராத்திரி விழாவும் ஆண்டுதோறும் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் கொலுமண்டபத்தில் நடந்து வருகிறது. பாரம்பரியமான இந்த விழா தற்போதும் தமிழக, கேரள அரசுகளின் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது.

இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 6ம் தேதி தொடங்குகிறது. விழாவில் பங்கேற்கும் சரஸ்வதி தேவி, முன்னுதித்த நங்கை அம்மன், முருகப்பெருமான் விக்ரகங்கள் கேரளாவுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பத்மனாபபுரம் அரண்மனையின் உப்பரிகை மாளிகை பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும், மன்னர் பயன்படுத்திய உடைவாளை எடுத்து கைமாற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு நடந்தது, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில், பத்மனாபபுரம் அரண்மனை அதிகாரி அஜித்குமார் உடைவாளை எடுத்து, கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார்.

அவர் தமிழக அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரனிடம் அளித்தார். இதையடுத்து ஞானசேகரன் அந்த உடைவாளை ஊர்வலத்தில் கொண்டு செல்லும் தமிழக தேவசம்போர்டு ஊழியர் சுதர்சனகுமாரிடம் கொடுத்தார். தொடர்ந்து உடைவாளோடு, அரண்மனை வளாகத்திலுள்ள தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் கோயில் சென்று, பூஜைக்குப்பின் சரஸ்வதி தேவி பூம்பல்லக்கில் எழுந்தருளினார். இதையடுத்து கோயில் முன்புற வாசலில் பூப்பல்லக்குகளில் காத்திருந்த முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகப்பெருமானோடு, சரஸ்வதி தேவியும் அங்கிருந்து புறப்பட்டார்.

பெண்கள் குலவையிட, பக்தர்கள் சரணகோஷத்துடன் புறப்பட்ட சுவாமி விக்ரகங்கள் பத்மனாபபுரம் அரண்மனை வந்தடைந்தன. அரண்மனை சார்பில் தாலப்பொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, வழிச்செலவுக்காக வலிய காணிக்கையும் வழங்கப்பட்டது. அப்போது, குமரி எஸ்பி பத்ரி நாராயணன் தலைமையில், தக்கலை டிஎஸ்பி கணேசன் முன்னிலையில் தமிழக போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் இருந்து உடைவாள் முன்செல்ல, சரஸ்வதி தேவி, முன்னுதித்த நங்கை அம்மன், முருகப்பெருமான் புறப்பட்டு சென்றனர். வழியெங்கும் பக்தர்கள் வரவேற்பு அளிக்க 5ம் தேதி மாலை கேரள மாநிலம் கரமனைக்கு சுவாமி விக்கிரகங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

பின்னர் சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நவராத்திரி மண்டபத்திலும், முன்னுதித்த நங்கை அம்மன் ஆரியசாலை பகவதி அம்மன், முருகப்பெருமான் செந்திட்டை பகவதி அம்மன் கோயிலிலும் அமர்த்தப்படுகின்றனர். வரும் 6ம் ேததி தொடங்கி 10 நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்கும் சுவாமி விக்கிரகங்கள், 17ம் தேதி குமரி மாவட்டம் புறப்படுகின்றன.

Related Stories: