×

கமுதி அருகே முதல் நாடு கிராமத்தில் ‘ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா’ - ஆடுகள் பலியிட்டு கமகம கறி விருந்து

கமுதி; கமுதி அருகே முதல் நாடு கிராமத்தில் பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நேற்றிரவு நடந்தது. இதில், 47 ஆடுகளை பலியிட்டு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது முதல் நாடு கிராமம். இக்கிராம கண்மாய் கரையில் அமைந்துள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து, ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை.

இந்த நிலையில், திருவிழாவுக்காக முதல் நாடு கிராமத்தில் ஊர் கூடி வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றிரவு 11 மணியளவில் ஆண்கள் மட்டும் ஒன்று கூடி ‘கால் படாதவாறு மண் எடுத்து பீடம்’ அமைத்தனர். இன்று காலை முதல் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், பொங்கல் வைத்து கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, 47 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டது. கை குத்தல் பச்சரிசி சாதம் உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர்.

இதையடுத்து சாத உருண்டை மற்றும் கறிகள் ஆண்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து, மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது. விழாவில், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மலர் மாலையுடன் வந்து எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் எவ்வித பிரசனையும் ஏற்படாது என்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kamuti , ‘Men Only Worship Bizarre Festival’ in First Country Village near Kamuti - Goat Sacrifice Gamagama Curry Feast
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் –...