×

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி நிறைவு: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு.!

செய்துங்கநல்லூர், அக். 3: ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் நடந்து வந்த தொல்லியல் அகழாய்வு பணிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கடந்த பிப்.26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக இப்பணிகள் நடந்து வந்தது. ஆதிச்சநல்லூர் ஊரின் மையப்பகுதி மற்றும் கால்வாய் கிராமத்திற்கு செல்லும் வழியில் என சுமார் 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கொற்கையில் நடந்து வந்த அகழாய்வு பணியில் 1000க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொற்கையை பொருத்தவரை பாண்டிய மன்னனின் தலைநகரமாகவும், மிகப்பெரிய வாணிப பட்டினமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடந்துள்ளது. மேலும் 1967-68ம் ஆண்டு கொற்கையில் முதல்முறையாக அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. அதன் பிறகு தற்போதுதான் அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. இங்கு குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கறுக்கும் தொழில்கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிப தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், சங்குகள், சங்கு வளையல்கள், வண்ண பாசிமணிகள், பானைகள், ரோம் நாட்டு பானை ஓடுகள், சீன பானை ஓடுகள், சுடுமண் உருவபொம்மைகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.
சிவகளையில் இந்தாண்டு நடந்த 2ம் கட்ட அகழாய்வு பணியில் இறந்தவர்களை புதைத்த சிவகளை பரம்பு, பேட்மாநகரம், மூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகளும், பராக்கிரமபாண்டி திரடு, ஆவாரங்காடு திரடு, பொட்டல் திரடு, செக்கடி ஆகிய 4 இடங்களில் வாழ்விட பகுதிகளை கண்டறிவதற்காக 8 குழிகளும் அமைக்கப்பட்டது. இதில் பரம்பு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அகழாய்வு பணியில் குழந்தைகள் விளையாடும் வட்டசில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல்கள் பிரிக்க பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனை கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசி மணிகள், சீன நாட்டு நாணயம், காப்பர் குழாய், சீன பானை ஓடுகள், வாள், கத்தி, உழி என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தவிர ஆவாரங்காடு திரட்டில் சுடாத செங்கலால் அமைக்கப்பட்ட கட்டுமானம், பராக்கிரமபாண்டி திரட்டில் செங்கலால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகளையில் கடந்தாண்டு முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டதில் இதன் வயது 3200 ஆண்டுகள் என்று தெரிவித்தார். இதன் காரணமாக தாமிரபரணி கரையில் உள்ள பொருநை நாகரீகத்தின் வயது 3200 ஆண்டுகள் என்று பறைசாற்றப்பட்டது.

இதனை பெருமைப்படுத்தும் விதமாக ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை என்ற பெயரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 30ம் தேதியுடன் இந்த தொல்லியல் அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றது. இதுவரை 2000க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகளையில் அடுத்தாண்டு 3ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. கொற்கையில் அடுத்தாண்டு கடல்சார் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளதை அடுத்து தொடர்ந்து அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மூன்று தொல்லியல் களங்கள் மட்டுமல்லாமல் ஏராளமான தொல்லியல் வரலாறுகள் புதைந்து கிடக்கிறது. எனவே அப்பகுதிகளிலும் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Adichanallur ,Sivakalai ,Korkai , Excavation work completed at Adichanallur, Sivakalai, Korkai: Discovery of more than 2 thousand items.!
× RELATED கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்