மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா உடல் அடக்கம்: கட்சியினர் திரண்டு வந்து அஞ்சலி

சேலம்: மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜாவின் உடல் இன்று காலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சேலத்தை சேர்ந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா (57), நேற்று தனது பிறந்தநாளை கொண்டாட தயாரானார்.

தந்தையின் சிலைக்கு மாலை அணிவிக்க புறப்பட்டபோது, திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர், சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜாவின் உடல், பூலாவரியில் உள்ள அவரின் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அவரின் மறைவு குறித்து அறிந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வீட்டின் முன் குவிந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். அவர், பூலாவரியில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சாமிநாதன், பழனிவேல் தியாகராஜன்,

காந்தி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மதிவேந்தன், மூர்த்தி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன் எம்பி, சுப்புலட்சுமி ஜெகதீசன், காந்திசெல்வன், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி.ராஜா, பழனியப்பன், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,

தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, பொன்கவுதமசிகாமணி எம்பி, கதிர்ஆனந்த் எம்பி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விசிக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த வீரபாண்டி ராஜாவின் உடலை அவரது தந்தையான வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடம் அருகே அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.

இன்று காலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீரபாண்டி ராஜாவின் உடல் ஏற்றப்பட்டது. பின்னர், வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார்,

வெண்ணிலா சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொது மக்கள் மலரஞ்சலி செலுத்தியபடி சென்றனர். பின்னர், வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடம் அருகே வீரபாண்டி ராஜாவின் உடலை அடக்கம் செய்ய எடுத்து வைத்தனர். அப்போது, முன்னணி நிர்வாகிகள் புகழாரம் சூட்டினர். குடும்பத்தினர், இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், வீரபாண்டி ராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

More
>