×

வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

தண்டையார்பேட்டை: வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். ராமலிங்க அடிகளார் ஆன்மீக பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்துள்ளார். இதனால் அவரை வள்ளலார் என அழைத்தனர். சென்னை தங்கசாலை  வீராசாமி தெருவில் தங்கி, 33 ஆண்டு காலம் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவந்தார். இதனால் அவரை சந்தித்து ஆசிபெற ஏராளமான மக்கள் வரத்தொடங்கினர். அதன்பிறகு  வடலூரில் ஜோதி அடைந்தார்.

இதையடுத்து வள்ளலார் வாழ்ந்த இடத்தில் வருடத்தில் 365  நாட்களும்  தினந்தோறும்  இன்றுவரை 300 பேருக்கு  உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வள்ளலார் சபையை பதி என்பவர் நிர்வகித்து வருகிறார்.  இதுபோல் சென்னையில் பல இடங்களில் வள்ளலார் சபை தொடங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் சபையை எந்த இந்து அறநிலைய துறை அமைச்சரும் ஆய்வு செய்ததில்லை. இந்நிலையில் வள்ளலாரின் பிறந்தநாள் விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை தங்கசாலையில் வாழ்ந்த அவரது வீட்டில் முதன்முறையாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், வள்ளலார் சபை நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: வாழ்ந்து மறைந்த மனித கடவுளாக போற்றப்படுகின்ற ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளில் அவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வருமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நான் இங்கு வந்துள்ளேன். இதுவரை எந்த அறநிலைய துறை அமைச்சரும் வள்ளலார் வாழ்ந்த வீட்டை ஆய்வு செய்ததில்லை. வள்ளலார் வாழ்ந்த வீட்டை அமைச்சர் பார்வையிடுவது இதுதான் முதல்முறை.

ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. வள்ளலார் சபைக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. திமுக அறிக்கையில் தெரிவித்தபடி  வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார் செய்ய விளம்பரம் செய்துள்ளோம். அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. கோயில்களில் உபயோகத்தில் இல்லாத நகைகளை  சட்ட நடவடிக்கையின்படி உருக்கி கட்டிகளாக மாற்றப்படும்.

இந்த நகை கட்டிகளை பாதுகாக்க சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் அதிகாரிகள் மாலா, ராஜிவ், ரவிச்சந்திரபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோயில்களில் பயன்பாட்டில் உள்ள நகைகளை வைத்துகொண்டு,  பயன்படுத்தாத நகைகளை  உருக்கும் வேலை தொடங்கப்படும். கோயில் நகை பாதுகாப்பு குறித்து திருவேற்காடு கோயில் அதிகாரிகளுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நகைகளை உருக்கும்போது ஒரு குண்டு மணி நகை கூட வீணாகாது. வெளிப்படைதன்மையோடு நடக்கும். ஐயப்பன் மேல் சத்தியமாக எந்த தவறும் நடக்காது.

சோமநாத் திருக்கோயில், திருச்சி சமயபுரம் கோயிலில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. நகைகள் உருகும் திட்டத்திற்கு பாஜ கண்மூடித்தனமாக எதிர்கிறது. நகைகள் பயன்படாமல் வைத்திருப்பதால் யாருக்கு என்ன லாபம். அவர்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் அதனையும் செயல்படுத்தப்படும். மதம், இனம் வைத்து அரசியல் செய்யக்கூடாது என முதல்வர் கூறியுள்ளார். அதை நான் செய்யமாட்டேன். எம்மதமும் சம்மதம். கொரோனா  தொற்று யாருக்கும் பரவவில்லை என்றால் அனைத்து கோயில்களும் திறக்கப்படும். தெய்வங்களுக்கு பூஜை தொடர்ந்து நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vallar ,Vadalur ,Minister ,Sebabu , Map ready to set up Vallalar Manimandapam on 72 acres of land in Vadalur: Interview with Minister BK Sekarbabu
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை