×

தமிழகத்தில் 4வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 20 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

சென்னை: தமிழகத்தில் 4வது மெகா தீவிர தடுப்பூசி முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். 20 ஆயிரம் தீவிர தடுப்பூசி முகாம்கள் மூலம் இன்று தகுதி வாய்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்.12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கைவிட கூடுதலாக அதாவது மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த செப்.19ம் தேதி நடந்தது. இதில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதையடுத்து 3வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 24 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 4வது  மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் தடுப்பூசி பணிகளில் ஈடுபடுகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 13 சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திருப்தியாக இல்லை என அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் அம்மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் கூடுதல் முனைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்டு 26ம் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், கடந்த செப்.12ம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 350 தடுப்பூசிகளும், 19-ந் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : 4th phase mega ,vaccination ,camp ,Tamil Nadu , 4th phase mega vaccination camp in Tamil Nadu: Target to pay 20 lakh people in 20 thousand centers
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு