வியாசர்பாடி பகுதியில் 5 ரூபாய் டாக்டர் சிலை திறப்பு

பெரம்பூர்: வியாசர்பாடியை சேர்ந்தவர் மருத்துவர் திருவேங்கடம் (70). இவர், அந்த பகுதியில் 5 ரூபாய்க்கு  பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். பண வசதி இல்லாத மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் செய்து வந்தார். இதனால், இவர் 5 ரூபாய் டாக்டர் என  அழைக்கப்பட்டார். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் வியாசர்பாடி கணேசபுரத்தில்  இவரது கிளினிக் செயல்பட்டு வந்தது. மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது  அளித்து கவுரவித்தது. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெற்கு  ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மாரடைப்பு ஏற்பட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி காலமானார்.

இது அப்பகுதி மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வடசென்னையை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நம்பிக்கை சமூக நல அறக்கட்டளை சார்பில், வியாசர்பாடியில் உள்ள இவரது கிளினிக்கில், அவருக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மூத்த பத்திரிகையாளர் குமார ராமசாமி நேற்று திறந்து வைத்தார். இதில், சமூக நல அறக்கட்டளை தூயவன், திருவேங்கடத்தின் மனைவி சரஸ்வதி, அவரது மகள் பிரீத்தி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Related Stories:

More
>