திருத்தணியில் நகை கடையில் திருடிய ஆந்திர கொள்ளையர்கள் கைது

திருத்தணி: திருத்தணி மா.பொ.சி. சாலையில் நிகில்(25), நகைக்கடை நடத்தி வருகிறார்.  நேற்று இரவு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா வளர்புரம் கிராமத்திலிருந்து நகை வாங்க பைக்கில் இருவர் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் கடைக்குள் வந்தார். பின்னர் தான் கேட்கும் மாடல் இங்கு இல்லை என்று தெரிவித்தார்.  இதனால், நிகில் எதிரே உள்ள மற்றொரு நகை கடைக்கு சென்று அங்கிருந்து தலா 3 சவரன் மதிப்புள்ள 4 தங்க சரடுகளை  கொண்டு வந்து காட்டினார்.  அப்போது,  கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிலை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கி தங்க சரடுகளை பறித்து தப்பினர்.

அதிர்ச்சியடைந்த நிகில்  கூச்சலிட்டார். அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.  அதற்குள் தயாராக இருந்த  பைக்கில் இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். தகவலறிந்த திருத்தணி கூடுதல் காவல்துறை போலீஸ் எஸ்பி சாய் பிரணித்,  இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

தொடர்ந்து சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.  அவர்களிடம், தங்க சரடுகள் இருந்தது. விசாரித்தபோது  ஆந்திரா மாநிலம் கரகண்டபுரம் சிக்கந்தர்(30) மற்றும் நகரி அருகே உள்ள சத்திரவாடா கங்காதரன்(24) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: