திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தொடர்பான திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம், தமிழக அரசின் உத்தரவின்படி `ஆசாதி கா அம்ரிட் மகோத்சவ்’ எனும் சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், திருவேற்காடு நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து நேற்று தனியார் மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையர் வசந்தி தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் நளினி முன்னிலை வகித்தார். கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்களிடம், திடக்கழிவு மேலாண்மை குறித்தும், பயன்படுத்திய பொருட்களில் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை எவ்வாறு தயாரிப்பது என விளக்கி கூறப்பட்டது.  இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உரையாற்றினார்.

மேலும், நகராட்சி பகுதிகளில் குப்பையிலிருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்று, அதில் வாழ்க்கை நடத்துபவர்களை பாராட்டி, நகராட்சி ஆணையர் வசந்தி புதிய ஆடைகளை வழங்கினார். இதில் திருவேற்காடு நகர திமுக மகளிரணி அமைப்பாளர் அமலேஸ்வரி, நகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள், நகர் நலச்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>