ஆரம்பாக்கம், ராணிப்பேட்டையில் கைவரிசை ஏடிஎம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் கைது: வெல்டிங் மெஷின், சிலிண்டர் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வடமாநில வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது எளாவூர் கிராமம். இங்கு உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 15.9.2021ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து கேமரா மீது ஸ்பிரே அடித்து மெஷினை காஸ் வெல்டிங் மூலம் கட்டிங் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் முடியாததால், தப்பிச் சென்று விட்டனர். இதுசம்பந்தமாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி, திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், 5 பேர் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கொள்ளை நடந்தது. அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை போலீசாருடன் திருவள்ளூர் மாவட்ட தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த இரு சம்பவம் குறித்து ஆராய்ந்தபோது கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பு, மேற்படி இரண்டு ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்த ஒரு நபரின் முகச்சாயல் ஒத்துப்போனது தெரியவந்தது. இதையடுத்து அவரின் வங்கி கணக்கு எண், தொலைபேசி எண்ணை கண்காணித்தபோது அந்த நபர் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் லோடு இறக்கிய லாரியில் வந்தவர் என்பதும், அந்த லாரி கொள்ளை சம்பவம் நடந்த அன்று சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளை கடந்து சென்றதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது கடந்த 30ம் தேதி இரவு அவர்கள் ஆரம்பாக்கம் வழியாக சென்னையை நோக்கி வருவது தெரிந்தது. இதையடுத்து எளாவூர் நவீன சோதனை சாவடியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தேடப்பட்ட லாரி வந்தபோது தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து லாரியில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையம் கொண்டுசென்று விசாரித்தபோது, அரியானாவை சேர்ந்த சாஜித், ஹர்சாத், லுக்மன் மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், மேற்கண்ட 2 கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவர்களை கைது செய்து ஏடிஎம் மெஷின்களை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மெஷின், காஸ் சிலிண்டர் மற்றும் ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கொள்ளையடித்த மீதிப்பணத்தை அரியானாவில் உள்ள உறவினர்களுக்கு அவர்கள் அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து கண்காணித்து கொள்ளையர்களை பிடித்த திருவள்ளூர் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் வரவழைத்து பாராட்டுக்களை தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

மேலும், இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்திய அரக்கோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் யுவராஜ், அரக்கோணம் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் ஆகியோரை எஸ்பி வருண்குமார் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Stories:

More
>