×

துபாய் எக்ஸ்போ கட்டுமான பணியின் போது 5 பேர் பலி: முதல் முறையாக வாய் திறந்தது அமீரகம்

துபாய்: துபாயில் நேற்று முன்தினம் தொடங்கிய உலகின் மிக பிரமாண்டமான ‘துபாய் எக்ஸ்போ-2020’ல், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதற்கான வளாகத்தை கடந்த 2019ம் ஆண்டு முதல் அமீரக அரசு கட்டி வந்தது. இதில், தினமும் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 2 லட்சம் ஊழியர்கள் நேரம், காலமின்றி ஈடுபட்டனர். ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தை கட்டுவதற்கு, 24 கோடி மணி நேர மனித உழைப்பு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இந்த கட்டுமான பணியில் விபத்துகள் அதிகளவில் நடப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தலிலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து கொண்டு, மிரட்டி வேலை வாங்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் உலகளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கட்டுமான வளாகத்தில் நடந்த விபத்துகளின் விவரங்களை வெளியிடும்படியும் அமீரக அரசை வலியுறுத்தின. ஆனால், அமீரக அரசு மவுனமாக இருந்தது. இதனால், இந்த கண்காட்சியில் பங்கு பெறப் போவதில்லை என ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 நாடுகளும் அறிவித்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கண்காட்சி தொடங்கப்பட்ட நிலையில், கட்டுமான பணியின் போது நடந்த விபத்துகளில் 5 தொழிலாளர்கள் இறந்ததாக இந்த கண்காட்சியின் தகவல் தொடர்பாளரான ஸ்கோனாய்ட் மெக்ஜியாசின் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால்,  விபத்துக்கள் பற்றி விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இந்தியா நிரந்தர கட்டடம்
துபாய் கண்காட்சியில் பல்வேறு நாடுகள் விதவிதமான வேலைபாடுகளுடன் ஆடம்பரமான அரங்கங்களை அமைத்துள்ள நிலையில், இந்தியா தனது 4 மாடிகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தை ரூ.400 கோடி செலவில் அலுவலகம் போன்ற அமைப்புடன் கூடிய நிரந்தர கட்டடமாக அமைத்துள்ளது. கண்காட்சிக்கு பிறகும் வர்த்தகம், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதற்காகவே, இதுபோல் கட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Dubai Expo ,US , Dubai Expo, Construction, Kills, UAE
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!