×

மனம் விரும்பியதைச் செய்தால் மன அழுத்தம் வராது!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் தங்களுடைய சந்தோஷங்களையும் துன்பங்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அவ்வாறு ெசய்வதற்கும் அவர்களுக்கு நேரமில்லை. அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல விஷயங்களை தங்கள் உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் பகிர்ந்து கொண்டனர்.

அவ்வாறு பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது; அவர்கள் கூறும் ஆறுதல் மனதிற்கு நிம்மதியை தந்தது. ஆனால் இன்றைய எந்திரமயமான வாழ்க்கையில் அலுவலகம் மற்றும் குடும்பத்தில் தனக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கவலைகளையும் பெண்கள் வெளிப்படுத்தாமல், தன்னுள்ளே வைத்துக்கொண்டு அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் மன அழுத்தம் அதிகரித்து அது தற்கொலை வரை கொண்டு செல்கிறது.

மன அழுத்தத்திற்கான முக்கிய காரணம் நாம் நமக்கான வாழ்க்கையை வாழ்வதில்லை. நாம் பெரும்பாலான விஷயங்களில் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அவர்கள் செய்த பல விஷயங்களை நம்மால் செய்ய முடியவில்லையே என்று நினைக்கிறோம். அது நமக்கு இயலாமை எண்ணத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. மன அழுத்தம் என்பது பலருக்கும் பலவிதங்களில் ஏற்படுகிறது. அது அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தை பொறுத்து அமையும்.

அதை அவர்கள் சாதிக்கும்போதோ அல்லது அது அவர்களுக்கு கிடைக்கும்போதோ அவர்கள் மனம் நிம்மதி அடைவார்கள். அவ்வாறு இல்லாமல் எதிர்மறையாகும்போது மன அமைதியில்லாத நிலை ஏற்படுகிறது. இதுவே மன அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது. மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ போர்டிஸ் மலர் மருத்துவமனையின் மன ஆரோக்கியம் மற்றும் நடத்தை அறிவியல் துறையின் உளவியல் ஆலோசகர் டாக்டர் சினேகா ஜார்ஜ் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளதோடு, தீர்வுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

‘‘எல்லோருக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அது வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாகும். நீங்கள் அதிக அளவிலான வேலைகளை செய்ய வேண்டும் என்று எண்ணும் போதும், நீங்கள் சரியாக தூங்காதபோதும் மட்டுமே உங்கள் உடல் மன அழுத்தத்தை உணர்கிறது. வேலை, பணம், உறவு, நட்பு அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டாலோ அது குறித்து நீங்கள் கவலைப்படும்போது, நீங்கள் மன அழுத்தத்தை உணர முடியும்’’ என்கிறார் டாக்டர் சினேகா ஜார்ஜ்.

‘‘மன அழுத்தத்தில் இருந்து விடுபட இயல்பாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். முற்றிலும் தேவையில்லாத ஒரு செயலைச் செய்வதை தவிர்த்து விட வேண்டும். உங்களால் முடியும் என்பதைக் காட்டிலும் நீங்கள் அதிக அளவு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்போது, ``உண்மையில் என்ன செய்ய வேண்டும்?’’ என்னால் எவ்வளவு செய்ய முடியும்? அதற்கான காலக்கெடு என்ன? நான் என்ன மாற்றங்களை செய்ய முடியும்? என்பதை முதலில் நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கும்போது தயங்காமல் உதவியை பெற்றுக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

எதையாவது நினைத்து ஓடிக்கொண்டிருக்காமல் ஓய்வெடுக்க வேண்டும். இசையை கேட்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்; நிதானமாக, இனிமையான விஷயங்களை பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை செய்வதன் மூலம் உங்கள் கவலையிலிருந்து நீங்கள் விடுபடலாம். அது தோட்டக்கலை அல்லது ஓவியக்கலை என்று எதுவொன்றாகவும் இருக்கலாம். நீங்கள் விரும்பும் ஒன்றை செய்வதற்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை உருவாக்கி, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் துவங்க வேண்டும்.

நீங்கள் அந்த வேலையை முடித்த பிறகு அடுத்த வேலையை துவங்க வேண்டும். தங்களால் முடிக்கப்பட்ட வேலையை சரிபார்த்தல் என்பது நேர்மறையான சிந்தனையோடு திருப்தியையும் அளிக்கும். இது நீங்கள் தொடர்ந்து பயணிக்க உங்களை ஊக்கப்படுத்தும். சுகமோ, துக்கமோ, கோபமோ எதுவாக இருப்பினும் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை உங்களுக்குள் போட்டு அழுத்திக் கொள்ளாதீர்கள். ஏதேனும் ஒரு விஷயம் அல்லது யாராவது உங்களை தொந்தரவு செய்யும்போது, எதற்கும் கவலைப்படாமல் உறுதியுடன் இருங்கள். உங்கள் கவலைகளை உங்களுக்கு விருப்பமானவர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தவில்லை என்றால், அதனால் மன வருத்தம் ஏற்பட்டு மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். உணர்வுகளை வெளிப்படுத்துவதே சிறந்த, உறுதியான வழியாகும். நமக்கென்று ஒரு சீரான திட்டத்தை உருவாக்க வேண்டும். வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை, சமூக நடவடிக்கைகள் மற்றும் தனியான முயற்சிகள், தினசரி பொறுப்புகள் மற்றும் வேலையில்லா நேரம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை கண்டறிய முயற்சி செய்யுங்கள். ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படும்போது, உங்களின் நேர்மறையான குணங்கள் உட்பட, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பாராட்டும் எல்லாவற்றையும் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த விஷயங்கள் உங்களை முன்னோக்கி செல்ல உதவும். எல்லோரிடமும் நல்ல குணமும், கேளிக்கை மற்றும் நகைச்சுவை உணர்வு உண்டு. அதனை வெளிப்படுத்த வேண்டும். சிரிப்பது என்பது உங்கள் மன அழுத்தத்திற்கு எதிராக பல வழிகளில் போராட உதவுகிறது. நமக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும் நம் வாழ்க்கையை நடத்த உதவும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை தயாரித்து, அவற்றை அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும். இதன் விளைவாக நாள் முழுவதும் இனிமையானதாக இருக்கும்’’ என்றார் சினேகா ஜார்ஜ்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!