×

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜல்ஜீவன் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம குடிநீர், துப்புரவுக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது: ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைப்பது மட்டுமின்றி, கிராமங்கள், பெண்கள் என அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 2009 வரை 3 கோடி மக்கள் தான் குழாய் மூலம் குடிநீர் பெற்று வந்தனர். 2009ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர்.

நாட்டில் 80 மாவட்டங்களில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் தற்போது சென்றடைகிறது. 70 ஆண்டுகளாக நடந்ததை விட 2 ஆண்டுகளில் அதைவிட அதிக பணிகள் நாட்டில் நடந்துள்ளது. இதனால், நாட்டின் எந்த பகுதிக்கும் குடிநீரை டேங்க்கர்கள் மூலமோ, ரயில்கள் மூலமோ கொண்டுவரும் சூழ்நிலை உருவாகவில்லை. குழாய் மூலம் குடிநீர் இணைப்பு முன்பு 31 லட்சமாக இருந்தது. தற்போது 1.60 கோடிக்கு மேல் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் கொள்கையை புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் வீடுகளிலும், நீச்சல் குளத்திலும் தான் தண்ணீர் இருந்தது. மக்கள் வறுமையை அவர்கள் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

விமர்சனங்களை மட்டுமே அதிகம் விரும்புகிறேன்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஓபன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்,  ‘எதிர்க்கட்சியின் அறிவுசார் நேர்மையின்மை, அரசியல் வஞ்சகம் ஆகியவற்றால் பல ஆண்டுகளாக குடிமக்களுக்கு சென்றடைய வேண்டிய நன்மைகள் நிலுவையில் உள்ளது. அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க சில கடினமான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. பஞ்சாப், அரியானா, உ.பியில் ஒரு பகுதி விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அதன் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால், குற்றச்சாட்டுகளை கூறுபவர்களே அதிகமாக உள்ளனர். விமர்சனங்கள் செய்வதற்கு ஆழ்ந்த அறிவும், அந்த பிரச்னையை பற்றி அறிந்து கொள்வதற்கான கடின உழைப்பும் தேவை. என்றார்.

தமிழக ஊராட்சி தலைவியுடன் பேசிய பிரதமர்
ஜல் ஜீவன் திட்டத்தில் சிறந்த ஊராட்சியாக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளரி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள 412 வீடுகளுக்கும் 30 நாளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளேரியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது, ஊராட்சி தலைவி சுதா பேசுகையில், வீட்டு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதால் அதிக நேரம் மிச்சமாகிறது. அந்த நேரத்தை மற்ற பயனுள்ள வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம். 2 செக்டேம் மற்றும் கிராம ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மழைநீரை சேமித்து, கோடையில் பயன்படுத்த உள்ளோம் என்றார்.

Tags : Jaljivan ,Modi , Jaljivan Project, Drinking Water Connection, Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க…