புதுச்சேரி தனியார் விடுதியில் காதலனுடன் பெண் வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை: வேலூர் பகுதி ஊராட்சிக்கு போட்டியிட்டவர்

வேலூர்: புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று முன்தினம் ஒரு ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது. இதுகுறித்து பெரியகடை போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்தவர்கள் வேலூரை சேர்ந்த நந்தினி, மோகன்ராஜ் என்பதும், கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேலூர் கருகம்புத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக பணியாற்றியவர் மோகன்ராஜ் (20). இவரது வீட்டின் அருகே வசிக்கும் கார்த்திக்கின் மனைவி நந்தினி(26). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந் நிலையில் மோகன்ராஜுக்கு நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். இது நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் கண்டித்த போதிலும் மோகன்ராஜுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நந்தினியும் மோகன் ராஜும் வெளியூர் செல்ல முடிவு செய்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு  காட்பாடி ரயில் நிலையம் வந்து ரயிலில் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து புதுச்சேரிக்கு கடந்த 30ம் தேதி சென்றனர். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி ஊர் சுற்றிவிட்டுள்ளனர்.

இதில் நந்தினி வரும் 9ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், வேலூர் கருகம்புத்தூர் ஊராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்ததும் அவருக்கு கட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. திருமணம் ஆகாத இளைஞனுடன் சேர்ந்து ஊரை விட்டு ஓடி வந்துவிட்டோம். மீண்டும் ஊர் திரும்பினால் அவமானம் எனக்கருதி நந்தினி தனது தாலியை கழற்றி வைத்துவிட்டு, மோகன்ராஜுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More
>