×

மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டு வீழ்த்த ஏ.கே. 47 துப்பாக்கியுடன் தீவிரம்

 கூடலூர்: நீலகிரி மாவட்டம் மசினகுடி தேவன் எஸ்டேட் பகுதியில் 3 நபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி அடித்துக்கொன்றது. புலியை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மங்கள பசுவன் என்ற முதியவரை அடித்துக்கொன்று உடலில் சில பாகங்களை தின்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறபிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் 2 இணை இயக்குநர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட  குழுவினர் புலியை சுட்டுக் கொல்லும் பணியை துவங்கினர்.

வனத்துறையினருடன்  ஏ.கே. 47 துப்பாக்கியுடன்  20 பேர் அடங்கிய அதிரடிப்படையினர் மற்றும் கேரளாவில் இருந்து வந்துள்ள 13 பேர் கொண்ட சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறையினர் உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்கொல்லி புலி நேற்று முன்தினம் மாலை சிங்கார வனப்பகுதிக்கு சென்ற நிலையில் நேற்று காலை மீண்டும்  மங்கள பசுவனைத் தாக்கிய அதே வனப்பகுதியில் இருப்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து புலியை தேடும் பணியில் ஈடுபட்ட  5 குழுக்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் புதிதாக 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.   இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், டி23 புலி மசினகுடி வன பகுதிக்கு வந்துள்ளது. அது திறந்த வெளிக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்து வருகிறோம். புலியை உயிருடன் பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடியாத பட்சத்தில்தான் சுட்டுக்கொல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் 2 மாடுகளை மரத்தில் கட்டிவைத்துள்ளனர். அதன் அருகே மரத்தின் மீது பரண் அமைத்து புலியை கண்காணித்து வருகிறார்கள்.

Tags : Machinagudi forest , Machinagudi, forest, killer tiger
× RELATED மசினகுடி வனத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள்