வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற கருவிகள் மாஜி பொதுமேலாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

வேலூர்:  வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாக ஆவின் முன்னாள் பொதுமேலாளர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஆவின் அலுவலகம், வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2017-18ல் பொது மேலாளராக பிரபாகரனும், உதவி பொது மேலாளராக முரளி பிரசாத்தும் பணியாற்றினர். அப்போது பால் குளிரூட்டும் நிலையத்தில் பயன்படுத்தப்படுத்த 40 சுத்திகரிப்பு கருவிகள் ரூ.1 கோடியே 69 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.

இதற்காக 13 நிறுவனங்களிடம் இருந்து மதிப்பீடு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் குறைந்த மதிப்பீடு வழங்கிய 3 நிறுவனங்களிடம் இருந்து 40 சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதாகவும் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2019ல் வரவு செலவு கணக்கு தணிக்கை நடந்தது. அதில் அரசின் விதிகளை மீறி ஒப்பந்தம் விடாமல் மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகளை வாங்கியதும், அதில் 3 நிறுவனங்கள் போலியானவை என்றும் தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரபாகரன், முரளி பிரசாத் ஆகியோர் கூட்டு சேர்ந்து அரசின் விதிமுறைகளை மீறி 3 போலி நிறுவனங்களிடம் இருந்து 40 தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியது உறுதியானது.

இதைத்தொடர்ந்து முன்னாள் ஆவின் பொதுமேலாளர் பிரபாகரன், உதவி பொது மேலாளர் முரளி பிரசாத் மற்றும் போலி தொழில் நிறுவன உரிமையாளர்கள் சிவகங்கை தென்றல் நகரை சேர்ந்த உதயகுமார், ரமேஷ், காட்பாடி தாராபுரத்தை சேர்ந்த சரவணன், ஸ்ரீதர் ஆகிய 6 பேர் மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது பிரபாகரன் மதுரை மாவட்ட கிராமப்புற வாழ்வாதாரப்பணி கூடுதல் இயக்குநராகவும், முரளி பிரசாத் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலக உதவி பொது மேலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>