×

உள்ளாட்சி தேர்தலில் 11 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களுக்கான தற்செயல் தேர்தலில் வாக்காளர்கள், 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.  

அந்தவகையில் ஆதார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் கார்டு), தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,  இந்திய கடவுச்சீட்டு(பாஸ் போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசு, மத்திய/மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Election Commission , Local Election, Document, Election Commission
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...