×

அனைத்து துறைகளிலும் ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான்போல் செல்லரிக்க செய்து விட்டது: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை: ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மீது 1500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கடந்த 2014ல் புகார் எழுந்தது. இதையடுத்து, பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கையும்  மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் லஞ்சம் வாங்கியதாக 3500 வழக்குகள் துறை ரீதியான விசாரணை நிலையில் நிலுவையில் உள்ளன என்றும் லஞ்சம் வாங்கி காவல்துறையில் தொடர்ந்து முறைகேடுகளை செய்து துறையின் செயல்பாடுகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்திய பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டுள்ளார்.

 சஸ்பெண்ட் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கு முடித்து வைக்கபடுகிறது. அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம். ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும்.  ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி அதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது.

துறைரீதியான விசாரணைக்கு பாஸ்கரன் ஆஜராகவில்லை என்றால் விசாரணை அதிகாரியின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக கூடாது. சஸ்பெண்ட் காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியில்லாமல் தலைமையகத்தை விட்டு வேறு பகுதிக்கு குடிபெயரக்கூடாது. அதை மீறினால் சஸ்பெண்ட் காலத்தில் அவருக்கு பிழைப்பூதியம் வழங்க கூடாது.  லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகவும் பேஷனாகவும் ஆகிவிட்டது. முன்னரெல்லாம் வருவாய் மற்றும் பதிவு துறைகளிலும் மாநகராட்சியிலும்தான் ஊழல் நடைபெற்றது.

இப்போது, அனைத்து துறைகளிலும் ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் அரித்து விட்டது. ஊழல் குற்றத்தை விசாரிக்கும் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிரத்தை கடைபிடித்து தவறு செய்தால் அதற்கான விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கற்பிக்கும் வகையில் விசாரணை நடத்த வேண்டும். தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி இதுதொடர்பான வழிமுறைகளுடன் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags : Chennai High Court , All Department, Corruption, Society, Chennai High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...