×

போக்சோ மற்றும் லஞ்ச வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது: சட்ட திருத்தம் கொண்டுவர அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

சென்னை: போக்சோ மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு, சஸ்பெண்ட் காலத்திற்கான பிழைப்பூதியம் (சம்பளத்தில் ஒரு பகுதி) வழங்காமல் இருக்கும் வகையில், தமிழ்நாடு பிழைப்பூதிய சட்டம் மற்றும் இதர பணியாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆர்.பெரியசாமி என்பவர், பேரூராட்சிகளில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதேபோல், போக்சோவில் கைதானவர்கள் குறித்த தகவலை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்திலும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான பதில்கள் தராததால் இருவரும் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு கடந்த ஜூலை 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட இரு துறை பொது தகவல் அதிகாரிகளும் ஆஜராகினர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் அளித்துள்ள உத்தரவு: லஞ்ச வழக்குகளிலும், போக்சோ சட்டங்களின் கீழும் நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும்போது அந்த காலத்தில் அவர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

90லிருந்து 180 நாட்கள் வரை அவர்களின் மாத சம்பளத்தில் 75 சதவீதமும், 180 நாட்களுக்கு பிறகு முழு ஊதியமும் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் 6 ஆண்டுகள் பிழைப்பூதியம் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவருக்கு போக்சோ நீதிமன்றம் 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. போக்சோ மற்றும் லஞ்ச வழக்குகளில் நீதிமன்ற விசாரணையில் காலதாமதம் ஏற்படுகிறது. துறை ரீதியான விசாரணையிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் நீதிமன்றம் மற்றும் துறை ரீதியான விசாரணைக்கு அரசுதான் செலவு செய்கிறது.  இதுபோன்ற குற்றங்களில் சஸ்பெண்ட் செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அவர்கள் மீது துறைரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். ஊழல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றம் செய்தவர்களுக்கு அவர்களின் சஸ்பெண்ட் காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

* ஊழல், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்கள் மீது தொடரப்படும்  குற்ற வழக்குகளில் தீர்ப்பு வரும்வரை, அவர்கள் மீது துறைரீதியான விசாரணையை  நிறுத்தி வைக்க வேண்டும்.
* குற்றம் செய்தவர்களுக்கு, சஸ்பெண்ட்  காலத்தில் பிழைப்பூதியம் வழங்காமல் இருக்க, சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
* சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50% ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் சம்பளம் வழங்கப்படுகிறது.
* சஸ்பெண்ட் காலக்கட்டத்தில் நீதிமன்றம், துறை ரீதியான விசாரணைக்கு அரசுதான் செலவு செய்கிறது. இவர்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

Tags : State Information Commission , Pokcho, bribery case, suspended, civil servant, salary
× RELATED 1911 ஜன.1 மின் இணைப்பு வழங்கப்பட்டதாக...