×

பலத்த சூறாவளி காற்று: சத்தியில் 2 ஆயிரம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், பவானிசாகர் அருகே உள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நேந்திரன், கதலி, ஜி9 உள்ளிட்ட அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன.

ரங்கசாமி என்கிற தங்கராஜ் (62) என்பவரது தோட்டத்தில் 300 வாழை மரங்களும், மணி (55) என்பவரது தோட்டத்தில் 600 வாழை மரங்களும், அப்பகுதி சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் என மொத்தம் 2,000 வாழை மரங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில், சூறாவளி காற்று காரணமாக விழுந்து சேதமடைந்ததால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இயற்கை சீற்றம் காரணமாக சேதமடைந்த வாழை மரங்களை வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை துறையினர் கணக்கெடுப்பு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bananas, damage, farmers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி