×

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 9 வயது மாணவரின் நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய விழிப்புணர்வு தொடர் ஓட்டம்: அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: சென்னை சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவர் 9 வயது மாஸ்டர் சர்வேஷின் நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை கன்னியாகுமரியில் அமைச்சர் மனோதங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை சென்னை சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவர்  மாஸ்டர் சர்வேஷ் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கி சென்னை நோக்கி புறப்பட்டார். இவர் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, தென் இந்தியாவின் முக்கிய பகுதிகளின் வழியாக 10 நாட்களில் 750 கிமீ தனது தொடர் ஓட்டத்தின் முடிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடைகிறார். இவரது நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் இன்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது: வளர்ச்சிக்கான இலக்குகள் என்ற 17 அம்சங்களை வைத்து உலக நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து உலகத்தை பாதுகாக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறது.

நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசெல்ல சென்னை சாய்ராம் பள்ளியின் 10 வயதை எட்டுகின்ற மாணவன் சர்வேஷ் பல விருதுகள், பரிசுகள் பெற்றவர் இப்போது நமது அய்யன் திருவள்ளுவர் சிலையில் இருந்து சென்னை வரை 750 கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டம் ஓட இருக்கிறார். இந்த உலகம் இருக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒரு சூழியல் குறித்த விழிப்புணர்வுடன் வாழ வேண்டும். வறுமை ஒழிக்கப்பட வேண்டும், பசியற்ற நிலை ஏற்பட வேண்டும், சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்க வேண்டும். நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மத்தியில் மத்தியில் செல்ல வேண்டும் என்று இந்த மாரத்தான் ஓடுகின்ற சர்வேசை தமிழக அரசின் சார்பில் வாழ்த்தி வரவேற்று பயணத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மொத்த பயணத்திலும் சர்வேஷ் ஐக்கிய நாடுகளின் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தவிருக்கிறார். இதை தவிர, தமிழகத்தில் அவரது பயண தடத்தில், அவர் 2 லட்சம் விதை உருண்டைகளை வழி நெடுகிலும் விதைக்கவிருக்கிறார். அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்த செயல், இதுவரை யாரும் செய்ய துணியாத ஒரு செயலாக, எந்த சாதனைபட்டியலிலும் இடம் பெறாத ஒரு செயலாக கருதப்படுகிறது. மாஸ்டர் சர்வேஷ் என்ற ஒன்பது வயது நிரம்பிய ஒரு தடகள வீரர் இவர் சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்து கொண்டு பல்வேறு தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 146 பதக்கங்கள், 62 வெற்றி பரிசுகள், 256 சான்றிதழ்கள், 16 ரொக்க பரிசுகளை பெற்று சாதனைகளை படைத்துள்ளார். ஒரு கி.மீ தூரம் பின்னோக்கி ஓட்டத்தில் 2017ம் ஆண்டு 5 வயதில் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். 6 வயதில் 486 கி.மீ. தூரத்தை கடந்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 56 மாரத்தான் ஓட்டங்களில் பங்குபெற்ற ஒரே இளம் பங்கேற்பாளர் ஆவார். இந்த தொடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கும் மாஸ்டர் சர்வேஷை ஊக்குவிக்கும் வகையில் சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாகி அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து கலந்து கொண்டு வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் சாய்ராம் கல்விக் குழுமத்தின் அறங்காவலர்கள் முனுசாமி, சதீஷ்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Tags : Kanyakumari ,Chennai ,Minister ,Manothandaraj , Kanyakumari, Chennai, Awareness Series Flow, Minister Manothankaraj
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?