×

அரசின் விளம்பர தூதர் பதவியுடன் நடிகைக்கு யோகியின் தங்க நாணயம் ‘கிப்ட்’: உ.பி தேர்தலுக்கு பயன்படுத்த பாஜக திட்டம்

லக்னோ: உத்தரபிரதேச அரசின் விளம்பர தூதராக கங்கனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தங்க நாணயம் ஒன்றை அம்மாநில முதல்வர் கொடுத்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நடிகையை பாஜக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேற்று உத்தரபிரதேச மமுதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் சந்தித்தார். பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு தளங்களில் கருத்து தெரிவித்து வந்த கங்கனாவுக்கு, அம்மாநில முதல்வர் புதிய பதவி கொடுத்துள்ளார். அதாவது, உத்தரபிரதேச மாநில அரசின் பராம்பரிய தொழில் சார்ந்த மையங்களை உருவாக்கும் திட்டமான ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தை (ஒடிஒபி) மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பர தூதராக கங்கனாவை நியமித்துள்ளார்.

முன்னதாக, தனது ‘தேஜஸ்’ படத்தின் ஷூட்டிங் மொராதாபாத்தில் நடந்த போது, உரிய பாதுகாப்பு அளித்ததற்காவும், முதல்வருக்கு கங்கனா நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, கங்கனாவுக்கு ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட, தங்க நாணயம் ஒன்றை பரிசாக யோகி வழங்கினார். இதுதொடர்பாக கங்கனா வெளியிட்ட பதிவில், ‘எங்களது திரைப்படக் குழுவுக்கு பாதுகாப்பு அளித்த உத்தரப்பிரதேச அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் எனக்கு ராம ஜென்ம பூமி பூஜையில் வைக்கப்பட்ட நாணயத்தை பரிசாக கொடுத்தார். ‘அயோத்தி’ என்ற படத்தை தயாரிக்க உள்ளேன். வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தல், முதல்வருக்கு சிறந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களது ஆட்சி தொடரட்டும்’ என்று தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு உத்தரபிரதேச தேர்தலுக்கு கங்கனாவை பயன்படுத்த, பாஜக தலைமை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : BJP , BJP
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...