×

கேகேஆரை வீழ்த்தி பிளேஆப் வாய்ப்பில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்: ஷாருக்கான் சிறந்த மேட்ச் வின்னர்: கேப்டன் கே.எல்.ராகுல் பாராட்டு

துபாய்: ஐபிஎல் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 45வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், கில் 7 ரன்னில் ஆட்டம் இழக்க பின்னர் வந்த ராகுல் திரிபாதி 34 ரன்னில் (26 பந்து) கேட்ச் ஆனார். மறுபுறம் அரைசதம் விளாசிய தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் 67 ரன்னில் (49 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அதிரடி காட்டிய நிதிஷ் ராணா 18 பந்தில் 31 ரன் எடுத்தார். கேப்டன் மோர்கன் 2, தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் வெளியேறினர். கொல்கத்தா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் 8.5 ஓவரில் 70 ரன் எடுத்து சிறப்பான தொடக்கம் அளித்தனர். அகர்வால் 27 பந்தில், 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த நிகோலஸ் பூரன் 12, மார்க்ரம் 18, தீபக் கூடா 3 ரன்னில் வெளியேறினர். வெங்கடேஷ் அய்யர் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட, 2வது பந்தில் கே.எல்.ராகுல் 67 ரன்னில் (55 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷாருக்கான் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்த பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஷாருக்கான் 9 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 22 ரன்னில் களத்தில் இருந்தார். கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 12வது போட்டியில் 5வது வெற்றியை பெற்ற பஞ்சாப் இன்னும் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் உள்ளது. கொல்கத்தா 7வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் கே.எல்.ராகுல் கூறியதாவது: நாங்கள் அற்புதமாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடினோம். வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். கனத்த இதயத்துடன் ஹர்பிரீத்தை வெளியேற்ற வேண்டியிருந்தது. கெய்ல் விலகியதால் எங்கள் சிறந்த லெவன் என்னவாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். ஷாருக்கான் வலைகளில் அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். இன்று அவர் சரியான கிரிக்கெட் ஷாட்களை விளையாடினார், அவர் பந்தை நீண்ட தூரம் அடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அவரால் வெற்றிகரமாக முடிக்க முடியும். அதை தமிழகத்திற்காக செய்துள்ளார். நாங்கள் ஒரு சிறந்த அணி என்பது அனைவருக்கும் தெரியும். 2வது சீசனில் 4 போட்டிகளிலும் கடைசிவரை போராடி உள்ளோம். எங்களைப் போன்ற ஒரு இளம் அணிக்கு இது ஒரு நல்ல கற்றல், என்றார்.

பிளேஆப்பில் இருப்போம்
கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், ரஸ்சல் ஆல்ரவுண்டர் நிலையில் எங்களுக்கு ஒரு பெரிய இடைவெளியை விட்டுச்சென்றுள்ளார். அந்த இடத்தை நிரப்ப யாராவது வேண்டும். இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் கடுமையாக போராடுவோம். நம்பிக்கையுடன் இரண்டு நல்ல முடிவுகளைப் பெற்று பிளேஆப்பில் இருப்போம், என்றார்.

Tags : Punjab Kings ,Ariana ,Captain K. ,Rahul , IPL
× RELATED பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ்