×

திருச்செங்கோடு, பள்ளிபாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி கூட்ட அரங்கில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து காவல்துறை, வருவாய்த்துறை நகராட்சி, அரசு அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: திருச்செங்கோடு பகுதியில் நேற்று பெய்த கனமழைக்கு 8 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் முதற்கட்டமாக 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கபட்ட 230 பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, ஒரு வாரத்திற்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருச்செங்கோடு நகர்பகுதியில் பழைய நீர்வழித்தடத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பேரிடர்களின் போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 5 நகராட்சிகள் 18 பேரூராட்சிகள் 364 வருவாய் கிராமங்களிலும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மழை காலங்களில் நீர்நிலை பகுதிகளில் குளிப்பதோ, துணி துவைப்பதோ மற்றும் செல்பி எடுப்பது போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ இளவரசி, நகராட்சி ஆணையாளர் (பொ) சண்முகம், தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் நான்கு சாலை, கோரக்காட்டு பள்ளம், களியனூர் மணல்காடு உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் தெரிவித்த யோசனைகளை கேட்டறிந்தார். பின்னர் பள்ளிபாளையம் நான்கு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டார்.

அரசு பதிவேட்டில் உள்ள நீர் வழிப்பாதையை கண்டறிந்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், குமாரபாளைம் தாசில்தார் தமிழரசி ஆகியோருக்கு உத்தரவிட்டார். கோரக்காட்டு பள்ளத்தில் வளர்ந்துள்ள கோரைபுல், செடி கொடிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவு அடுத்து பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் உள்ள பகுதிகளை நகராட்சி பணியாளர்கள் கண்டறிந்து இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். வெள்ளம் வெளியேற வழியமைத்தனர்.

ராசிபுரம்: ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிபேட்டை, சீராபள்ளி, காக்காவேரி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை திடீர் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் புகுந்தது. கொரோனா வார்டு மற்றும் மகப்பேறு வார்டு பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அதே போல், புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் உள்ளே செல்ல  சிரமப்பட்டனர். மோகனூர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. ரயில்வே பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்றவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

* மலைப்பாதையில் பாறைகள் சரிவு
திருச்செங்கோட்டில் நேற்று அதிகாலை பெய்த கனமழைக்கு, அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன. திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியில், நேற்று அதிகாலை 2 மணி முதலே கனமழை பெய்தது. சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் விளை நிலங்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்தது. கனமழைக்கு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து தடைபட்டது. அரசு உத்தரவால் நேற்று கோயிலுக்கு யாரும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம், சாலையில் கிடந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

* திருச்செங்கோட்டில் 92 மி.மீ மழை பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் நாமக்கல் நகரில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை பெய்த மழையால், நகரில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லிமீட்டரில்): எருமப்பட்டி - 20, குமாரபாளையம் -  71, மங்களபுரம் - 7,   மோகனூர் -  31, நாமக்கல் - 9, பரமத்திவேலூர் -  34, புதுச்சத்திரம் - 45, ராசிபுரம் -  72, சேந்தமங்கலம் - 4, திருச்செங்கோடு -  92,  கலெக்டர் அலுவலகம் - 7, கொல்லிமலை -  71 மில்லி மீட்டர் பதிவானது.


Tags : Tiruchengode , Tiruchengode, Collector personally inspected the flood affected areas in the school: provided relief aid
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு