மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில மாதமாக தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வந்தது. அதன்பின், கடந்த மாதம் துவக்கத்தில் பெய்த கன மழையால், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையானது முழு அடியையும் எட்டியது. இதனால்,  உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அவ்வப்போது பெய்த கன மழையால், ஆற்றில் தண்ணீர் திறப்பு அடிக்கடி நடந்தது. இந்நிலையில், கடந்த 2  நாட்களுக்கு முன்பு  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக, நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும், மலை முகடுகளில் இருந்தும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 1200 கன அடியாக  அதிகரித்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, இரவில் மெயின் மதகுகள் வழியாக  உபரிநீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு ஒரு சில மதகுகள் அடைக்கப்பட்டது.நேற்று காலை மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 560  கன அடி வீதம் உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது, அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, உபரிநீர் திறப்பு இருக்கும் எனவும், ஆற்றில் உபரிநீர் அவ்வப்போது திறப்பதால், ஆழியாற்றில் குளிப்போர் கவனமாக இருக்க வேண்டும் எனவும்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: