×

கார் சீட்டுக்கு பயன்படுத்தப்படும் போம் தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ: 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு'

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் இருக்கைக்கு பயன்படுத்தப்படும் போம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு, தயாரிக்கப்படும் போம்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு3 ஷிப்ட் முறையில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொழிற்சாலையில் போம் ரோல் வைக்கப்பட்டுள்ள முதல் தள குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அடுத்தடுத்து 2வது, 3வது தளத்துக்கும் தீ மளமளவென பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது, 3வது மாடியில் இருந்து வெளியில் வரமுடியாமல் 2 ஊழியர்கள் தவித்தனர். அவர்களை, தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதில் 3 மாடிகளிலும் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான போம் ரோல்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Car Seat, Boom Factory, Company, Fire :, Workers
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை