இஸ்லாம் பற்றி அவதூறு பேச்சு சாமியார் மீது குண்டாஸ் பாய்ந்தது

புழல்: புழல் அடுத்த புத்தாகரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (48). இவர், அதே பகுதியில் ‘யோகா குடில்’ எனும் பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்துக்களின் மந்திரமான திருச்சிற்றம்பலத்தை தவறாக சித்தரித்து, தனது வலைதளப்பக்கத்தில் சிவகுமார் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் சிவாச்சாரியார்கள் புகார் அளித்தனர். இதேபோல் புழல் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த சிவகுமார், இஸ்லாம் மதம் பற்றி கடந்த வாரம் யூடியூப் சேனலில் அவதூறாக பேசி வெளியிட்டார். புகாரின்பேரில், கடந்த 21ம் தேதி சிவகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு, சிறையில் உள்ள சிவகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, சிவகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று முன்தினம் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல் புழல் சிறை நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, சிவகுமார் குண்டர் சட்டத்தில் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: