94வது ஆண்டு பிறந்தநாள் சிவாஜியை கவுரவித்த ‘கூகுள்’: டூடுல் வெளியிட்டு மரியாதை

சென்னை: சிவாஜியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவரது டூடுல் ஓவியம் வெளியிட்டு கவுரவித்தது. திரைப்படத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்று சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. செவாலியே பட்டம் பெற்ற முதல் இந்தியரான சிவாஜி, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதா சாகேப் பால்கே விருது  உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழக அரசின் சார்பிலும் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிவாஜியின் ரசிகர்கள் சார்பில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய இணைய தேடுதல் பொறியான ‘கூகுள்’ நிறுவனம், நேற்று தனது முதல் பக்கத்தில் சிவாஜியை கவுரவிக்கும் வகையில், கண்ணைக் கவரும் டூடுலை வைத்தது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக வடிவமைக்கப்படும் கூகுள் டூடுல் முகப்பு பக்கம், சிவாஜியை போற்றும் வகையில், இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவரால் உருவாக்கப்பட்ட ஓவியம் அழகு சேர்த்துள்ளது. சிவாஜியின் ஓவியம் டூடுலாக கூகுள் வைத்துள்ளதை பலரும் பாராட்டி, சமூக வலைத்தளங்களில் அதைப் பகிர்ந்துள்ளனர்.

Related Stories: