×

கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க கோரி மனு போலீஸ் பதில் தர 4 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்திய நீலகிரி ஷோலூர்மட்டம் காவல் நிலையம் 8 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.   இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட 8 பேரை விசாரிக்க அனுமதி கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளி்க்கப்பட்டது.

நீலகிரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும். புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டனர். எனவே எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Kodanadu ,Edappadi ,Court , Kodanadu, Case, Edappadi, Police, High Court
× RELATED கொடநாடு வழக்கை சிபிஐ கையிலெடுக்கும்: எடப்பாடிக்கு பாஜ மிரட்டல்